புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் வட்டார அளவில் கிராமங்கள் தோறும்  தடுப்பூசி முகாம்: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை, சூன் 17: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் வட்டார அளவில் கிராமங்கள் தோறும்  தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது  என்றார் சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை நகராட்சி, திருவள்ளுவர் நகரில் நடைபெற்ற  கோவிட் தடுப்பூசி முகாமினை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (17.6.2021) வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர்  ரகுபதி கூறியதாவது: தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க  புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் கோவிட் நோய் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. எனினும் கோவிட் இல்லாத  மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை உருவாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் கோவிட் தடுப்பூசி முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில் நடைபெற்று வரும் கோவிட் தடுப்பூசி முகாம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி தென்பட்டவுடன் ஆரம்ப நிலையிலேயே கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கோவிட் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்துவது எளிது. எனவே பொதுமக்கள் உரிய விழிப்புணர்வு பெற்று கோவிட் நோய்க்கு தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெறுவதுடன் தாமதமாக மருத்துவமனை வருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் வட்டார அளவில் கிராமங்கள் தோறும்  தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோவிட் காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர்  அறிவிப்பின்படி ஏற்கெனவே முதற்கட்டமாக கோவிட் நிவாரண தொகை ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவிட் நிவாரண தொகை இரண்டாம் கட்டமாக ரூ.2,000 நிவாரணத் தொகை பொது மக்களுக்கு வழங்கியதன் மூலம் தேர்தலில  அறிவித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்கள் கேட்காத நிலையிலேயும் பொதுமக்களின் நிலை அறிந்து 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முதல்வர் அறிவித்தபடி  தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பொது மக்களுக்கு அறிவித்த திட்டங்களை மட்டுமல்லாமல் அறிவிக்காத பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலும் இந்தியாவிலேயே வேறு எந்த மாநில முதல்வரும் செயல்படாத வகையில் நமது முதலமைச்சர்  சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.

இதனை தொடர்ந்து திருமயம் வட்டம், ராங்கியத்தில் கோவிட் சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். மேலும் முதலமைச்சர்  பொது நிவாரண நிதிக்கு  ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சரிடம் ராங்கியம் கிராம பொதுமக்கள் வழங்கினர்.

 இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் அண்ணாத்துரை, பொது சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள்  க. நைனா முகமது, அரு.வீரமணி, எம்எ.்.பாலு, த.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தி புதுகை நிருபர்.

You missed