புதுக்கோட்டை, ஜூன் 8 :புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கோவிட் தொற்று நோயாளிகளுக்கு பாரம்பரிய உணவு முறைகள் மற்றும்  பாதுகாப்பான  வாழ்க்கை தொடர்பான   பயிற்சி அளிக்கப்படுகிறது .

இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.உம்மல் கதீஜா மற்றும் கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மைய நோடல் அலுவலர் மருத்துவர் ஆ.மாமுண்டி ஆகியோர் கூறியதாவது:கோவிட் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறைப்படி அமுக்கரா சூரண மாத்திரை ,நெல்லிக்காய் லேகியம், தாளி சாதி சூரணம் பிரமானந்த பைரவ  மாத்திரை, ஆடாதொடை, மணப்பாகு ,கப சூர குடிநீர், கிராம்புகுடிநீர்,   ஓமக்குடிநீர்  மற்றும் பாரம்பரிய உணவு வகைகள், மூலிகைதாம்பூலம் வழங்கப்படுகிறது. புற மருத்துவமாக 8 வடிவ நடை பயிற்சி, மூலிகை தூபம், ஓமப்பொட்டணம், திருமூலர் பிராணயாமம், சுயவர்ம பயிற்சி ,யோக முத்திரை பயிற்சி போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும்  பாரம்பரிய உணவு முறைகளான மாப்பிள்ளை சம்பா அரிசி, கேழ்வரகு , குதிரைவாலி, கம்பு, தினை, சாமை, வரகு, முளைகட்டிய பயறு வகைகள், இயற்கை தானியங்களை உண்பதால் ஏற்படும் நன்மை குறித்தும், இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட குடிசை முறை தின்பண்டங்கள் உண்பதன் நன்மைகள் குறித்தும்,செயற்கை உணவுகளினால் ஏற்படும் தீங்கு குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற் பருமன் இவை ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கோவிட் சிகிச்சை மட்டுமில்லாமல் உணவே மருந்து மருந்தே உணவு என்ற முறையில் சிகிச்சை அளிக்கப்படுவது மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.   தினமும் மேற்கண்ட  பயிற்சியை  மருத்துவர்கள் மணிவண்ணன், சுரேஷ், தேவி, கீதா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் செய்து வருகிறார்கள்.

c

You missed