தமிழக அரசின் 14  நெறிமுறைகளுடன் இன்று டாஸ்மார்  மதுபான கடைகள் திறப்பு:  தயார்நிலையில்  காவல்துறையினர்

புதுக்கோட்டை, சூன் 14:  தமிழக அரசின் 14 நெறிமுறைகளுடன் புதுக்கோட்டை உள்பட 27  மாவட்டங்களில்  உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் (14.6.2021)  இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகின்றன..

கொரோனா வைரஸ்  நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக மதுபானக்கடைகளில் கிருமிநாசினி தெளிப்பதோடு மட்டுமல்லாமல் கடையின் வெளிப்புறம் மற்றும் சுற்றுப்பறத்தில் பிளீச்சிங் பவடர் தினசரி 2  முறை தெளித்து கடைப்பணியாளர்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் டோக்கன் முறையை பின்பற்றி நெரிசலை தவிர்க்க  வேண்டும்.

 மதுபானக்கடைக்கு வரும்  நபர்கள் அனைவரும்  முககவசம்  அணிந்து வந்தால் மட்டுமே  மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும். மதுபானக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கையுறை, முககவசம் மற்றும் கிருமிநாசினி தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

மதுபானக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றுவதற்காக  தடுப்பு வேலி  தவறாமல்  அமைக்க  வேண்டும்.  இந்த தடுப்பு வேலிக்குள்  வாடிக்கையாளக்கள்  6 அடி இடைவெளியில் 1 மீட்டர் வட்டத்திற்குள் நிற்கும் வண்ணம் வட்ட வடிவிலான 50 அடையாளங்கள் 200 அடி தூரத்திற்கு ஏற்படுத்த வேண்டும்.

 மதுபானக்கடைகளில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு ஒரு வரிசையில் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்த தடுப்பு வேலிக்குள்  வந்து மதுபானங்கள் பெற்று செல்ல வேண்டும். 200 அடி தூரத்திற்கு தடுப்பு வேலி அமைக்க போதுமான போதிய இடவசதி  இல்லாத இடங்களில்  போதுமான வட்ட அடையாளங்கள்  வரைய வேண்டும்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத  11 மாவட்ட  எல்லைப்பகுதியில் உள்ள கடைகளில்   தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, கூடுதலாக விற்பனை கவுன்ட்டர்கள் 6 அடி இடைவெளியில் அமைத்து காவல்துறையினர் மூலம் கூட்டத்தினை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்பட 14 நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 144 டாஸ்மாக் கடைகள்  திறக்கப்படுகின்றன. புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் பாதுகாப்புக்கு  போலீஸார் தயார் நிலையில்    உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தி்ல்  மதுபானக்  கடைகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 18 கடைகளுக்கு  தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, கூடுதலாக விற்பனை கவுன்ட்டர்கள் 6 அடி இடைவெளியில் அமைக்கப்பட்டு காவல்துறையினர் மூலம் கூட்டத்தினை கட்டுப்படுத்திட புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

செய்தி புதுகை நிருபர்.

You missed